டெல்லி: 2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஒன்றிய அரசு இன்று (ஜன. 25) அறிவித்துள்ளது.
இந்நிலையில், நான்கு பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 107 பேருக்கு பத்மஸ்ரீ எனப் பல துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த 128 பேரின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
பதம் விபூஷண்
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத் (குடிமைப்பணி), மகாராஷ்டிராவின் இந்துஸ்தானி பாடகர் பிரபா ஆத்ரே (கலை), உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மறைந்த எழுத்தாளர் ராதேஷ்யாம் காம்கே (இலக்கியம் மற்றும் கல்வி), மறைந்த பாஜக தலைவர் கல்யாண் சிங் (பொது விவகாரம்) ஆகிய நால்வருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம பூஷண்
காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் (பொது விவகாரம்), பாரா ஒலிம்பிக்கில் மூன்று முறை தங்கம் வென்றுள்ள ஈட்டி எறிதல் வீரர் தேவந்திர ஜஜாரியா (விளையாட்டு) ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் நிறுவனர் சைரஸ் எஸ். பூனாவால்லாவுக்கும், கோவாக்ஸின் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடேக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா, அவரின் மனைவி சுசித்ரா எல்லா ஆகியோர் இணைந்தும் பத்ம பூஷண் விருதை பெற உள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை (வணிகம் மற்றும் தொழிற்துறை), மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாராயண நாதெல்லா (வணிகம் மற்றும் தொழிற்துறை), மறைந்த அறிவியல் அறிஞர் சஞ்சயா ராஜாராம் (அறிவியல் மற்றும் பொறியியல்), மதுர் ஜாஃப்ரி (சமையல் கலை) ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட உள்ளது.
பத்மஸ்ரீ
தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த்திரைப்பட நடிகை சௌகார் ஜானகி (கலை), எழுத்தாளரும் கவிஞருமான சிற்பி பாலசுப்பிரமணியம் (இலக்கியம் மற்றும் கல்வி), சமூக ஆர்வலர் எஸ். தாமோதரன், செனாய் இசைக்கருவி வாசிப்பாளர் பாலேஷ் பஜாந்திரி (கலை) ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் முதன்முறையாக இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாரா பேட்மிண்டன் வீரர் பிரமோத் பாகத், பாரா ஈட்டி எறிதல் வீரர் சுமித் அன்தில் என விளையாட்டு வீரர்களுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.