தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தில் தற்போதைய பயிர் பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லை முழுவதுமாக கொள்முதல் செய்யக்கோரி, மத்திய அரசுக்கு தெலங்கானா அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
நெல் கொள்முதல் செய்வதில், மத்திய அரசு பாரபட்சமாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டி, டெல்லியில் உள்ள தெலங்கானா பவனில் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் ஒருநாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தெலங்கானா மாநில விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றும், மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான கொள்முதல் முறையை கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான கொள்முதல் முறை இல்லாவிட்டால், இது நாட்டின் உணவுப்பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையக்கூடும் என்றும் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில், பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகெய்த் கலந்துகொண்டு, ஆதரவு தெரிவித்தார்.