ஜம்மு: அமர்நாத் புனித யாத்திரை கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு கடந்த ஜூன் 30ஆம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. இதனிடையே கடந்த 8ஆம் தேதி அமர்நாத் குகை அருகே மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், யாத்ரீகர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். இதில் 17 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மாயமானார்கள். இதனால் குகைக் கோயிலுக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு நேற்று(ஜூன் 11) முதல் யாத்திரை மீண்டும் தொடங்கியது.
இந்த நிலையில், 13வது பேட்ச்சாக சுமார் 7 ஆயிரம் யாத்ரீகர்கள் அமர்நாத் யாத்திரைக்கு சென்றனர். இன்று காலை(ஜூலை 12) ஜம்முவில் உள்ள பகவதிநகர் முகாமிலிருந்து, 265 வாகனங்களில் 7 ஆயிரத்து 107 யாத்ரீகர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக ஜூன் 29ஆம் தேதி, 76 ஆயிரத்து 662 யாத்ரீகர்கள் புறப்பட்டுச் சென்றனர். அமர்நாத் குகைக் கோயிலுக்கு இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். 43 நாட்களாக நீளும் அமர்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி முடிவடைகிறது.