கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் உள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா, கொபிலி , திசாங் ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் ஓடுகிறது.
கொபிலி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், நாகோன் மற்றும் ஹோஜாய் மாவட்டங்கள் நீரில் மூழ்கி உள்ளன. கனமழை வெள்ளத்தால் 27 மாவட்டங்களைச் சேர்ந்த 1790 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து 7.17 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு சார்பில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த முகாம்களில் 80,298 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாகோன் மாவட்டம், கான்பூரில் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் நேற்று உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலை, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: புனேயில் இருவேறு இடங்களில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!