உலகை ஆட்டிப்படைக்கும் கரோனா தொற்றுக்குத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் முயன்றுவருகின்றனர். ஃபைஸர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து 90 விழுக்காடும் மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து 94.5 விழுக்காடும் பலனளிப்பதாக அந்நிறுவனங்கள் சமீபத்தில் அறிவித்தன.
கரோனா தடுப்பு மருந்து இந்தாண்டு இறுதியிலோ அல்லது அடுத்தாண்டு தொடக்கத்திலோ புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மறுபுறம் கரோனா தடுப்பு மருந்து குறித்த போலி செய்திகள் அதிகம் இணையதளத்தில் உலா வர தொடங்கியுள்ளன.
இதைத் தடுக்க ஐக்கிய நாடுகள் அவை லண்டன் பல்கலைக்கழகத்திலுள்ள The Vaccine Confidence Project என்ற அமைப்புடன் சேர்ந்து டீம் ஹாலோ என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
ஐநாவின் இந்த முன்னெடுப்பில் இந்தியாவிலிருந்து 22 ஆராய்ச்சியாளர்கள் உள்பட மொத்தம் 100 ஆராய்ச்சியாளர்கள் கைக்கோத்துள்ளனர். இதிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் கரோனா தடுப்பு மருந்து குறித்து மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிப்பார்கள். மேலும், கரோனா குறித்து பரவும் போலி செய்திகளுக்கும் இந்த ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளிப்பார்கள்.
கரோனா தடுப்பு மருந்து குறித்து பல்வேறு போலி செய்திகள் பரவிவரும் இந்தச் சூழ்நிலையில் ஐநாவுடன் இணைந்து ஆராய்ச்சியாளர்கள் எடுத்துள்ள இந்த முன்னெடுப்பைப் பலரும் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: 95 விழுக்காடு பலனளிக்கும் மாடர்னா கரோனா தடுப்பு மருந்து!