ஷில்லாங் (மேகாலயா): வட கிழக்கு கவுன்சிலின் பொன்விழா கொண்டாட்டம் மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் இன்று(டிச.18) நடைபெற்றது. மாநில கன்வென்சன் மைய அரங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
இதில் ஆறு வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் சாலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். வட கிழக்கு கவுன்சிலின் 50 ஆண்டுகள் கால பயணம் குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "வட கிழக்குப் பிராந்தியத்தில் வான் வழிப்போக்குவரத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. இது விவசாய விளைப்பொருட்களை ஏற்றுமதி செய்ய விவசாயிகளுக்கு பயன்படுகிறது.
ஃபிஃபா கால்பந்து விளையாட்டில் ரெட் கார்டு காட்டுவதுபோல, கடந்த எட்டு ஆண்டுகளில் வடகிழக்குப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த ஊழல், வன்முறை, வாக்கு வங்கி அரசியல் போன்றவற்றிற்கு மத்திய அரசு ரெட் கார்டு காட்டியுள்ளது. முன்பு வட கிழக்குப் பிராந்தியத்தைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது இந்த பிரிவினைவாதத்தை நாங்கள் அகற்றி வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: "வட கிழக்கு பிராந்தியத்தில் மோடி அரசு அமைதியை நிலைநாட்டியுள்ளது" - அமித் ஷா