ஹைதராபாத்: கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு சட்டம் இயற்றியதையடுத்து, அதேபோன்ற சட்டத்தை இயற்ற மத்திய பிரதேச மாநில அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்தின் படி இந்து மதப் பெண்ணை காதலித்து அவர்களை வற்புறுத்தி இஸ்லாமியத்திற்கு மதமாற்றம் செய்ய வைத்தால் குற்றமாகும்.
அதேபோல், திருமணத்திற்காக மட்டும் மதமாற்றம் செய்வதை ஏற்க முடியாது எனவும் இந்த சட்டம் சொல்கிறது. இந்நிலையில், மத மாற்றம் அடைவது அரசியலமைப்புக்கு எதிரானது என்ற பிம்பத்தை உருவாக்கி, இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பூணர்வை தூண்டும் வகையில் பாஜக செயல்படுவதாக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், "ஒரு வயதிற்கு வந்த இளம் பெண்ணிற்கு தான் விரும்பிய ஆணணை திருமணம் செய்வதற்கான உரிமை உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களிலேயே மத மாற்றத்திற்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சட்டங்கள் சட்டப்பிரிவு 14, 15, 25 ஆகிய சட்டப்பிரிவுகளுக்கு எதிரானது" என்றார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக பேசிய அவர், "முடிந்தால் மோடி தலைமையிலான மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு அளிக்க முன் வரட்டும். அதேபோல், வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வேலைவாய்ப்பின்மை பிரச்னையை தீர்க்கட்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனை செய்யப்பட்ட 13 நிமிடங்களுக்குள் ரிசல்ட் - மும்பையில் புதிய வசதி