டெல்லி: . கடந்த பத்து நாட்களாக அதிமுகவில் நிலவி வந்த குழப்பங்களுக்கு மத்தியில் சென்னையில் நேற்று (ஜூன் 23) அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்றும், பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு கூடியது.
அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார். அதன் பின் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, "அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரித்து விட்டது.
மேலும், கட்சிக்கு ஒற்றைத் தலைமை வர வேண்டும். அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த மாதம் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் கூடும் என்று ஈபிஎஸ் தரப்பு அறிவித்தது.
இதற்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் நடந்துகொண்டிருக்கும் பொழுதே அரங்கத்தை விட்டு வெளியேறினார். இந்த நிலையில், ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மனுவில் ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இன்றி அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு சட்ட விரோதமானது என்றும் எனவே, 11 ஆம் தேதி பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பரபரப்பான அரசியல் சூழல்: டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம்