டெல்லி : மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியை தொடர்ந்து நாடாளுமன்றம் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கியது முதலே மணிப்பூர் விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் கலவரச் சம்பவங்கள் மற்றும் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தை அமைதியான முறையில் நடத்து பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கொடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார் என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி மணிப்பூர் விவகாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பிரதமர் மோடி தான் விளக்கம் அளிக்க வேண்டும் என முறையிட்டனர். மேலும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்தது.
எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் விவாதம் நடத்தப்படும் என நாடாளுமன்ற அலுவல் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட். 2) வழக்கம் போல் மழைக் கால கூட்டத் தொடரின் 10வது நாள் தொடங்கியது. டெல்லி சேவைகள் மசோதா தொடர்பான விவாதம் நடைபெற இருந்த நிலையில், மாநிலங்களைவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீசை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் நிராகரித்த நிலையில், அவையை விட்டு எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அதேபோல் மக்களவையில் மணிப்பூர் விவகாரம் பிரதமர் மோடியின் விளக்கம் கேட்டு எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின. மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ உரையை தொடர்ந்து மதியம் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க : பிரதமர் மோடிக்கு லோக்மான்ய திலகர் தேசிய விருது.. ஒரே மேடையில் சரத் பவார், பிரதமர் மோடி!