காங்கிரஸ் தலைமையில் 15 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள் ஆகிய பல்வேறு காரணங்களால் கூட்டத்தொடரை முடக்கிவருகின்றன.
இந்நிலையில், நாடாளுமன்றச் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் 15 எதிர்க்கட்சிகள் காலையில் ஆலோசனை நடத்தின. இதில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.
காங்கிரசுடன், திமுக, திருணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, இடதுசாரிகள், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசிய மாநாடு கட்சி உள்ளிட்ட பிரதான கட்சிகள் பங்கேற்றன.
127ஆவது சட்டத்திருத்தத்திற்கு ஆதரவு
நாடாளுமன்றத்தில் மோடி தலைமையிலான அரசு 127ஆவது அரசியல் சட்டத் திருத்தத்த மசோதாவை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்கு ஆதரவு தர எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளதாக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
127ஆவது சட்டத்திருத்த மசோதா என்றால் என்ன?
சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் எவை என்பதைக் கண்டறியும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது, மாநில அரசுகளுக்கு இல்லை என கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை சீர்செய்ய, மாநில அரசுகளுக்கும் ஓபிசி பிரிவினரைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொண்டுவரும்விதமாக புதிய சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் எனப் பல்வேறு மாநில அரசுகள், எதிர்க்கட்சிகள் மோடி தலைமையிலான அரசை வலியுறுத்தின.
மோடி அரசும் இந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இதற்காக 127ஆவது அரசியல் சட்டத்திருத்த மசோதாவை கொண்டுவரவுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கிவரும் நிலையில், இந்த ஓபிசி சட்டத்திருத்த விவகாரத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற ஆதரவு தரவுள்ளன.
இதையும் படிங்க: உத்தரகாண்ட் தூதுவராக வந்தனா கட்டாரியா- முதலமைச்சர் அறிவிப்பு