கேரள மாநிலம் திருவனந்தபுரம் கோட்டூரில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில், சுமார் 16 யானைகள் பராமரிக்கப்படுகிறது. கேரள அரசால் ரூபாய் 108 கோடி நிதி ஒதுக்கீடில் தொடங்கப்பட்ட இந்த மறுவாழ்வு மையத்தில், சுமார் 50 யானைகள் வரை வளர்த்திட முடியும்.
கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் தென்மலை வனப்பகுதியிலிருந்து மீட்கப்பட்ட குட்டி பெண் யானையை இந்த மையத்தில் அலுவலர்கள் பராமரித்து வருகின்றனர். இந்த யானை குட்டிக்கு ஸ்ரீகுட்டி எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த யானை முகாமிற்கு வந்து ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து, முகாம் அலுவலர்கள் பிறந்தநாள் விழா கொண்டாடியுள்ளனர். அலுவலர்கள் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் ஒன்றிணைந்து யானை குட்டியை வரவேற்று வெள்ளம், கரும்பு, அன்னாசி பழங்கள் கொண்டு தயாரித்த கேக்கை தும்பிக்கையால் வெட்டினர். யானை குட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம் பலரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.