மங்களூரு: கர்நாடகா மாநிலம், மங்களூரு கடற்கரை அதன் தனித்துவமான சடங்குகளுக்குப்பெயர் பெற்ற ஊராகும். இங்குள்ள பழக்கவழக்கங்கள் வேறுபட்டவை.
ஆன்மாக்களுக்குத் திருமணம் செய்வது என்பது இப்பகுதிகளில் பெரும்பாலும் நடக்கக்கூடிய ஒரு சடங்கு ஆகும். மேலும் இந்தத் திருமணங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் சிறப்புச்சடங்குகளில் ஒன்றாகும். இப்பகுதியில் வாழும் துளு மொழி (திராவிட மொழிகளில் ஒன்று) பேசும் மக்களுக்கு ஆன்மாக்கள் மீது தனி நம்பிக்கை உண்டு. இறந்தவர்கள் தங்களுடன் இருப்பதாக இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.
இறந்தவர்களுக்குத் தேவையான செயல்களை செய்தால், அவர்கள் முக்தி பெறுவார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை. திருமணம் ஆகாமல் இறந்தவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பது இங்குள்ள மரபு ஆகும். இதனடிப்படையில் திருமணத்திற்கு முன் ஒருவர் இறந்து விட்டால், அவர்களுக்கு சரியான திருமண வயது வரக்கூடிய நேரத்தில் திருமணம் செய்து வைப்பது இங்குள்ள வழக்கம் ஆகும். துளு மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படும் இந்த திருமணம் ஆடி அமாவாசை அன்று இரவுதான் நடைபெறும்.
இதன் காரணமாக துளு மக்கள் ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள் எதுவும் நடத்துவதில்லை. இந்த மாதத்தில் ஆன்மாக்களுக்கு மட்டுமே திருமணம் நடத்தப்படுகிறது. இந்தத் திருமணங்களில் மணமகனும், மணமகளும் உயிருடன் இல்லை என்பதைத் தவிர, மற்ற எல்லாத் திருமணங்களையும் போலவே அனைத்து முறைகளும் நடக்கும்.
திருமணத்திற்கு முன் இறந்த மணமக்களை தேர்வு செய்து திருமணத்திற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் செய்து ஆடி மாதத்தில் திருமணம் செய்து வைக்கப்படும். இதன் மூலம் இறந்தவர்களின் ஆசை நிறைவேற்றப்பட்டதாக நம்புகிறார்கள்.
இந்தத் திருமணத்தில் துளு மரபுப்படி பல திருமணச்சடங்குகள் நடத்தப்படுகின்றன. மணமகன் வீட்டில் வைத்து இந்த திருமணம் நடைபெறுகிறது. வெள்ளி அல்லது அரிசி கொண்டு சிறிய உருவில் மணமகனும், மணமகளும் செய்யப்பட்டு இரண்டு ஆசனங்களில் வைக்கப்படுகின்றனர். பின்னர் மணமகளின் ஆசனத்தில் ஒரு கரிமணி வைக்கப்படுகிறது. அதன் பிறகு சிக்கன் சுக்கா, மீன், சாதம் போன்ற உணவுகள் அவர்களுக்கு படையலாக்கப்படுகிறது. அதன்பின், திருமணத்திற்கு வந்த குடும்பத்தினருக்கு உணவு பரிமாறப்படுகிறது.
திருமணத்திற்குப் பிறகு மணமகன் வீட்டார் மணமகளின் வீட்டிற்குச் சென்று ஆஷாட மாதத்திலேயே மணமகளை அழைத்துச்செல்கின்றனர். ஆடி மாதத்தில் இதுபோன்ற திருமணங்கள் பல இடங்களில் நடக்கும். துளு மக்களின் சிறப்பு கொண்டாட்டங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சஞ்சய் ராவத் வீட்டில் மீண்டும் அமலாக்கத் துறை ரெய்டு... கைது செய்ய வாய்ப்பு?