கோழிக்கோடு (கேரளா): கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இதுவரை இரண்டு பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு நேற்று (செப் 13) நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 24 வயதான அவர் உடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் மூலம் நிபா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்து உள்ளது. முன்னதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், முதலமைச்சர் பினராயி விஜயம் மற்றும் மற்ற அமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, கோழிக்கோடு மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளார்.
இதன்படி, திருவிழா மற்றும் இதர நிகழ்ச்சிகள் அதிக அளவிலான மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல், மாவட்டத்தில் உள்ள 9 பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகள் தவிர இதர அனைத்து கடைகளும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பகுதிகளில் பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் நிற்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கோழிக்கோடு மாவட்டத்தில் செயல்படும் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். இதனிடையே, நிபா வைரஸ் தாக்கியவர்கள் உடன் தொடர்பில் இருந்ததாக 157 சுகாதார ஊழியர்கள் உள்பட 789 பேர் பட்டியலிடப்பட்டு உள்ளனர்.
இவர்களில் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், 4 பேர் தீவிர பரிசோதனை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 78 பேர் மிகவும் கடினமான சூழலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: நிபா வைரஸ், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்கு பிரத்யேக கூட்டம் - அமைச்சர் மா.சு தகவல்!