கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கு சர்க்கர நாற்காலி வாங்குவதற்காக நிதி திரட்டும் நோக்கில், தனியார் கல்லூரி சார்பில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆன்லைனிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து நேற்று (ஆக.21) கோழிக்கோடு கடற்கரையில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்காக ஏராளமான டிக்கெட்டுகளை விற்பனை செய்த ஏற்பாட்டாளர்கள், அவர்களுக்கான இட வசதியை ஏற்பாடுகளை செய்யவில்லை என தெரிகிறது. இதனால் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் முட்டி மோதிக் கொண்டு உள்ளே செல்ல முயற்சித்துள்ளனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் முயற்சித்த போது, பொதுமக்கள் சிலர் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இதனால், அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 6 போலீசார் உள்பட 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதல் நடத்தியதாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தகவல் தெரிவித்தனர். நிதி திரட்டும் நிகழ்வில், கலைநிகழ்ச்சி நடத்தவே அனுமதி அளிக்கப்பட்டதாகவும், ஏற்பாட்டாளர்கள் அனுமதியின்றி இசைக் கச்சேரி நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் மண்வெட்டியால் 3 பேரை கொலை செய்த இளைஞர்