புபனேஸ்வர்: ஒடிஷா சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ், பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட துணை காவல் ஆய்வாளரால் சுடப்பட்டார். காரை விட்டு நபா கிஷோர் தாஸ் கீழ் இறங்கிய போது, அவர் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இரு முறை சுடப்பட்ட நிலையில், நபா தாஸ் மார்பில் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். துரிதமாக செயல்பட்ட அவரது ஆதரவாளர்கள் நபா தாஸை உடனடியாக காரில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து நபா தாஸ் புபனேஸ்வர் மருத்துவர் விமானம் மூலம் மாற்றப்பட்டார்.
நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய துணை காவல் ஆய்வாளர் கோபால் தாஸை, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் தெரியவராத நிலையில், கோபால் தாஸை கைது செய்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நபா தாஸ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் விரைந்தார். மருத்துவமனையில் இருந்த நபா தாஸின் மனைவி, மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் நபா தாஸின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
நபா தாஸின் உடல் நிலையில் சற்று மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர் சிகிச்சையில் நபா தாஸ் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் பட்நாயக், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த போலீஸுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: லால்சௌக்கில் தேசியக் கொடி ஏற்றி நடைப்பயணத்தை நிறைவு செய்தார் ராகுல் காந்தி