டெல்லி: பாலிவுட் திரைப்படங்களில் புகழ்பெற்ற கதாநாயகியாக வலம் வரும் சோனம் கபூர், தனது கணவருடன் டெல்லியில் உள்ள அம்ரிதா ஷெர்கில் மார்க் பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் சுமார் ரூ.2.41 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளைப் போனது.
இதுகுறித்து காவல் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அவர்களின் வீட்டில் பணிபுரிந்து வரும் செவிலியரான அபர்ணா ரூத் வில்சன் என்பவர் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், அவரது நடவடிக்கையை நோட்டமிட்டு வந்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவரும், அவரது கணவர் நரேஷ் குமாரும் இணைந்து, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ரூ.12 கோடி மதிப்புள்ள மூன்று சிலைகள் பறிமுதல்