புதுச்சேரியில் பாஜக- என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகியவை ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ்-திமுக-இடதுசாரிகள் ஒரு அணியாகவும் போட்டியிட வாய்ப்புள்ளன. இந்நிலையில் கடந்த சில நாள்களாக தொகுதிப் பங்கீடு செய்வதில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே இழுபறி நீடித்து வருகிறது. இதையடுத்து, நேற்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தனியார் விடுதியில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதற்கிடையில், காங்கிரஸ் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, "மக்களுக்கு சரியாக தொண்டாற்ற முடியவில்லை என்பதால் காங்கிரஸ் காட்சியில் இருந்து விலகி லட்சுமி நாராயணன் என்.ஆர்.காங்கிரஸில் இணைந்துள்ளார்.
பாஜக கூட்டணியில் நீடிப்பது குறித்து என்.ஆர்.காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இதைத்தொடர்ந்து விரைவில் கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்பது கலந்து பேசி முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.