புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க இன்னும் குறுகிய நாள்களே உள்ள நிலையில் இதுவரை பாஜக கூட்டணியில் வேட்பாளர் முடிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒன்றுகூடி, மாநிலங்களவை உறுப்பினருக்கு பாஜக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளித்திருந்தனர்.
ஆனால், இதுவரை மாநிலங்களவை உறுப்பினர் குறித்தான எந்த அறிவிப்பும் முதலமைச்சர் அறிவிக்காத நிலையில் பாஜக தலைவர், அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு தங்கள் கட்சியைச் சார்ந்த உறுப்பினருக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஆலோசனை கூட்டம்
இந்நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் தனியார் விடுதியில் நேற்று (செப்.20) இரவு 11:30 மணிக்கு நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், என்.ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர் உள்பட 12 பேர் பங்கேற்றனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களின் தகவலின்படி மாநிலங்களவை உறுப்பினர் பதவி பாஜகவுக்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம்...நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு