சென்னை: சென்னையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று முன்தினம் (ஜன.07) சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், இன்று (ஜன.09) சென்னை துறைமுகத்தில், இந்திய கடல்சார் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள சாகர் அன்வேஷிகா என்ற கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இதனையடுத்து பேசிய அவர், "2020ஆம் ஆண்டு கரோனாவுக்கான ஆண்டு மட்டுமல்ல, அறிவியல் சாதனைகளுக்கானது. மருத்துவப் பணியாளர்கள் மட்டுமல்லாமல், அறிவியல் நிபுணர்களும் இணைந்து இன்று நாம் எதிர்கொண்டு வரும் சவால்களுக்கான தீர்வை கண்டுபிடித்துள்ளனர்.
கடல் சார்ந்த பிரச்னைகள் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், சாகர் அன்வேஷிகா என்ற கப்பல் கடல்சார் ஆராய்ச்சிக்காக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து விஞ்ஞானிகளுக்கும் மகிழ்ச்சியான தருணம். கடல் ஆராய்ச்சிக்காக, ஏற்கனவே சாகர் நிதி, சாகர் சம்பதா, சாகர் தாரா, சாகர் மஞ்சுஷா, சாகர் கன்யா ஆகிய கப்பல்கள் நம்மிடம் உள்ளன.
மத்திய அரசின் ஆழ் கடல் திட்டம் மேம்படுத்தப்பட்டு வரும் இந்த தருணத்தில் புதிய கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்கடல் திட்டத்தின் மூலம் நமது அறிவும், ஆராய்ச்சியும் மேம்படும்" என்றார்.
இதையும் படிங்க: ஜனவரி 16ஆம் தேதி முதல் இந்தியாவில் கரோனா தடுப்பூசி-மத்திய அரசு