ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டு, அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி பறிமுதல் செய்யப்படும் ஆயுதங்களில் பெரும்பாலும் ஏகே-47 ரக துப்பாக்கிகளே கடந்த காலங்களில் இருந்துவந்துள்ளது.
ஆனால், கடந்த 13 மாதங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களில் 178 பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் ஏகே-47 ரக துப்பாக்கிகளின் பயன்பாடு பயங்கரவாதிகள் இடையே குறைந்துள்ளது தெரியவருகிறது. இந்த பிஸ்டல் ரகங்களில் பெரும்பாலும், அமெரிக்கத் தயாரிப்பான ஸ்டோகர் எஸ்டிஆர்-9, க்ளோக் 19 வகைகளும், சீனாவில் தயாரிக்கப்படும் சில பிஸ்டல் ரகங்களும் உள்ளதாக பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு படை தரப்பில், 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி வரை ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட என்கவுண்டர்களின்போது, 178 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பாரமுல்லா மற்றும் ஸ்ரீநகரில் அதிக அளவில் கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பல இடங்களில் சைலன்சர்கள் பொருத்தப்பட்ட க்ளோக் ரக பிஸ்டல்களும் சிக்கின. இந்த கைத்துப்பாக்கிகள் இந்திய எல்லைக்கு அப்பால் இருந்து ட்ரோன்கள் மூலமாக காஷ்மீருக்கு கொண்டு வரப்பட்டவை. பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களின் புள்ளிவிவரங்களை பகுப்பாய்வு செய்யும்போது, பயங்கரவாதிகளிடையே AK-47 பயன்பாடு குறைந்திருப்பதும், பிஸ்டல் பயன்பாடு அதிகரித்திருப்பதும் தெரியவருகிறது. இது வழக்கமான மாற்றம் கிடையாது என்றாலும், பாதுகாப்புபடை பயங்கரவாத செயல்களை ஒடுக்கும். பயங்கவாதிகளின் ஆயுதப்பரிணாமம் முறியடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அஸ்ஸாமில் கொடூரக் கொலை.. மனித தலை உடன் சுற்றித்திரிந்த நபர் கைது..