புதுச்சேரி: புதுச்சேரி குற்றப்பிரிவு காவல் துறைக்கு ரயில் மூலம் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கொண்டு வருவதாகத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போதைப்பொருட்களைக் கடத்தி வந்த வடமாநிலத்தவர்களைக் கைது செய்தனர்.
ரயில்நிலையத்தில் சோதனை
ஒடிசா மாநிலம், புபனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு வாரந்தோறும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று வந்த அந்த விரைவு ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, புதுச்சேரி குற்றப்பிரிவு காவல் துறைக்கு ரகசியத் தகவல் வந்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன் மேற்பார்வையில் குற்றப்பிரிவு காவல் துறையைச் சேர்ந்தவர்கள் ரயில்வே நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி காவல் துறை அதிரடி
இன்று, ரயிலில் வந்த அனைத்துப் பயணிகளிடமும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதில் மூன்று நபர்களிடம் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டு, காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
இதுகுறித்து எஸ்.பி. ஜிந்தா கூறுகையில்,
'புதுச்சேரியில் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்காக, இதைப்போன்ற சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்பொழுது தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் வடமாநில இளைஞர்கள் மூன்று பேரைக் கைது செய்திருக்கிறோம். மேலும், இதில் தொடர்புடையவர்களை காவல் துறை விரைவில் கைது செய்யும்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் கைதாகி விடுதலையானார் பிரியங்கா காந்தி