கௌகாத்தி: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக உருவெடுத்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை (டிச.26) கூறினார்.
மேலும், “வடகிழக்கு நாட்டின் வளர்ச்சியின் மைய புள்ளியாக மோடி கருதுவதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில் இங்கு 30 முறை பல்வேறு திட்டங்களுடன் வந்துள்ளார்” என்றும் தெரிவித்தார்.
அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோரின்கீழ் அஸ்ஸாம் மாநிலம் அமைதி மற்றும் வளர்ச்சி பயணத்தை மேற்கொண்டுவருகிறது.
அஸ்ஸாம் முன்பெல்லாம் போராட்டங்களுக்கும் வன்முறைகளுக்கும் பெயர் பெற்றது, ஆனால் சோனோவால் மற்றும் சர்மா ஆகியோர் பாரம்பரியத்தையும், வளர்ச்சியையையும் நிலைநிறுத்தி மக்களை ஊக்குவித்து பிராந்திய மக்களை நாட்டின் பிற பகுதிகளுடன் ஒன்றிணைத்துள்ளனர்” என்றார்.
மேலும், “போடோலாந்து பிராந்திய கவுன்சிலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்ற வெற்றி சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னோட்டம்” என்று தெரித்த அவர், “மாநிலத்தில் உள்ள அனைத்து போர்க்குணமிக்க அமைப்புகளும் சரணடைந்து மீண்டும் தேசிய நீரோட்டத்திற்கு திரும்பியுள்ளன” என்றும் தெரிவித்தார்.
டெல்லியில் போராடும் விவசாயிகள் குறித்து தெரிவிக்கையில், “புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை விவாதங்கள் மூலம் தீர்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'சிவசேனா உள்பட பாஜக எதிர்ப்பு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைய வேண்டும்'- சாம்னா