டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி இன்று (ஜூன் 13) டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்த ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றார். ராகுல் காந்தியுடன் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பேரணி சென்றனர். அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக தொண்டர்கள் முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் பாஜக மூத்தத் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஸ்மிருதி இரானி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காங்கிரஸின் பேரணி விசாரணை அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சி. இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன. இந்தப் போராட்டம் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியல்ல, மாறாக காந்தி குடும்பத்தின் ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பாதுகாக்கும் முயற்சி" என்று விமர்சித்தார்.
மேலும், ராகுல் காந்தி உள்பட யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றார். தொடர்ந்து பேசிய அவர், "இப்போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் முன்னாள் செய்தித்தாள் நிறுவனத்தில் காந்தி குடும்பத்தினர் ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிகழ்வு, ஒட்டுமொத்த காந்தி குடும்பமும் ரியல் எஸ்டேட்டில் ஈர்க்கப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது" என்று ஸ்மிருதி இரானி பேசினார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தியிடம் 3 மணி நேரமாக தொடர்ந்த விசாரணை நிறைவு