டெல்லி: ஜேக்கப் என்ற மருத்துவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "மருத்துவ பரிசோதனையில் உள்ள கரோனா தடுப்பூசிகளின் நிலை மற்றும் கரோனா தடுப்பூசி செலுத்திய பின்னர் தொற்று பரவல் குறைந்ததா? என்பதை உறுதிப்படுத்தும் தரவுகளையும் வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஷ்வரராவ் மற்றும் பி.ஆர் கவாய் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "கரோனா பாதிப்புகள் குறைவாக உள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது என்றும், பரவல் குறைவாக உள்ளதால் அதற்கேற்றார்போல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
தடுப்பூசி செலுத்தியவர்களைவிட, தடுப்பூசி செலுத்தாதவர்களால் அதிகளவு தொற்று பரவுகிறது என்பதற்கான மருத்துவ ஆதாரங்கள் உள்ளனவா? என்றும் கேள்வி எழுப்பினர். தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் குறித்த தரவுகளை பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி யாரையும் வற்புறுத்த முடியாது என்றும், மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை தன்னிச்சையானது அல்ல என்றும் தெரிவித்தனர். தடுப்பூசி செலுத்துவது மக்களின் தனிப்பட்ட உரிமையுடன் சம்பந்தப்பட்டதால், தடுப்பூசி கொள்கையும் அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டதுதான்" என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:காங்கிரஸில் இருந்து விலகுகிறார் ஹர்திக் பட்டேல்?