டெல்லி: உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (மார்ச் 10) எண்ணப்படுகின்றன.
முன்னதாக, உத்தரப் பிரதேசம் வாரணாசி தொகுதியில் உள்ளூர் வேட்பாளர்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் தேர்தல் அலுவலர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றதாக அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டினார். அதேபோல், உபியின் பல்வேறு இடங்களில் ஆளும் கட்சியினர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளில் ஈடுபட முயன்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, "2004ஆம் ஆண்டிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குற்றச்சாட்டுக்கு இடமில்லை
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, அவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறைக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. அறையில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்ற குற்றச்சாட்டுக்கு இடமில்லை" என்றார்.
சமாஜ்வாதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சுஷில் சந்திரா, "வாரணாசியில் எடுத்துச் செல்லப்பட்ட அந்த வாக்குப்பதிவு இயந்திரம் பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டது. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரம் அல்ல. ஒவ்வொரு இயந்திரத்திற்கும் தனியாக எண்கள் இருக்கும். பயிற்சி இயந்திரத்தில் இருந்த எண்ணும், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள இயந்திர எண்ணும் வேறுபட்டிருந்தது. இதை அரசியல் கட்சியினருக்கு விளக்கினோம். அதன்பின்பு அவர்கள் சமாதானம் ஆனார்கள்.
தேர்தல் அலுவலர் சஸ்பெண்ட்
தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருந்தும், பயிற்சி இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட உள்ளூர் வேட்பாளர்களுக்கு தகவல் கொடுக்காததால் வாரணாசி தேர்தல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடித்து வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 5 மாநில தேர்தல் முடிவுகள்: வெற்றிக்கனி யார் யாருக்கு?