நாட்டின் தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக விவசாயிகள் வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தின் ஒரு அங்கமாக குடியரசு தினமான இன்று (ஜனவரி 26) டிராக்டர் பேரணி நடத்தினர். காவல் துறையினரின் அனுமதியுடன் நடைபெற்ற இப்பேரணியில் வன்முறை வெடித்தது.
செங்கோட்டையில் நுழைந்த விவசாயிகள், அதன் கோபுரங்களில் அத்துமீறி ஏறி தங்களின் கொடிகளை ஏற்றினர். பேரணி நடத்த அனுமதி வழங்காத, பல பகுதிகளில் தடுப்பை மீறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அனுமதியை மீறி மத்திய டெல்லிக்குள் நுழைந்தனர். காவல் துறையினருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, கல்வீச்சிலும் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், எந்தப் பிரச்னைக்கும் வன்முறை தீர்வல்ல என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், 'யாருக்கு காயம் ஏற்பட்டிருந்தாலும் நாடுதான் பாதிப்பைச் சந்திக்கும். நாட்டின் நலனைக் கருதி விவசாயத்திற்கு எதிரான சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும்' எனப் பதிவிட்டுள்ளார்.