டெல்லி: அரசியல் மற்றும் பொருளாதார இடைத்தரகரான நீரா ராடியாவின் ஆடியோக்கள் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது. அதில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருடன் நீரா ராடியா உரையாடியிருந்ததாகப் புகார் எழுந்தது.
குறிப்பாக 2ஜி ஏலத்தில் சில நிறுவனங்களுக்கு அலைக்கற்றையை விற்பனை செய்ய வேண்டும் என ஆ.ராசாவிடம் நீரா ராடியா கேட்டதாக கூறப்பட்டது. மேலும் பலரிடம் சட்டவிரோதமாக ஏராளமான டீல்களை பேசியதாகவும், இதில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த ஆடியோ வெளியான சம்பவம் அப்போதைய அரசியல் சூழலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிஐ 14 வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. நீரா ராடியாவின் ஆயிரக்கணக்கான செல்போன் உரையாடல்களைக்கைப்பற்றி சிபிஐ ஆய்வு செய்து வந்தது. சுமார் 12 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நீரா ராடியாவின் செல்போன் உரையாடல் தொடர்பான அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்துள்ளது. அதில், நீரா ராடியா ஆடியோக்களில் குற்ற நடவடிக்கைகள் தொடர்பான எந்தவித பேச்சுகளும் இல்லை என்றும், அதனால் இந்த 14 வழக்குகளின் விசாரணையை கைவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ஜி வழக்கில் ஆ.ராசா குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இப்போது நீரா ராடியாவும் தவறு செய்யவில்லை என சிபிஐ தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் - சோனியா காந்தியை சந்தித்த கெலாட்!