ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஈடிவி பாரத் ஊடகத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்த நிவேதிதா சூரஜ் இன்று (நவம்பர் 19) கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கேரள மாநிலம் திருச்சூரில் வசிக்கும் சூரஜ்-பிந்து தம்பதியின் மகள் நிவேதிதா. இவர் ஊடகத்துறையில் பட்டம்பெற்றவர். 2021ஆம் ஆண்டு மே மாதம் ஹைதராபாத்தில் உள்ள ஈடிவி பாரத் ஊடகத்தின் கேரள பிரிவில் உதவி ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார்.
ஹைதராபாத்தின் பாக்யலதாவில் தங்கியிருந்த நிவேதிதா நாள்தோறும் அலுவலக பேருந்து மூலமாக பணிக்கு சென்றுவருவது வழக்கம். அதேபோல மகாராஷ்டிராவைச் சேர்ந்த சோனாலி சாவ்ரே என்பவரும் ஈடிவி பாரத் ஊடகத்தின் உத்தரப் பிரதேச பிரிவில் உதவி ஆசிரியராக பணியாற்றிவருகிறார். இவரும் பாக்யலதாவிலிருந்து அலுவலக பேருந்தில் பணிக்கு சென்றுவருவார். அந்த வகையில், இருவரும் இன்று அதிகாலை 5 மணி அளவில் வழக்கம்போல் பணிக்கு புறப்பட்டனர்.
அப்போது சாலையை கடக்கும்போது எல்.பி.நகரில் இருந்து ஹயாத் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த கார் இருவர் மீதும் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் நிவேதிதா சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். சோனாலி சாவ்ரே படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே கார் ஓட்டுநர் தப்பியோடினார்.
இதுகுறித்து ஹயாத் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். நிவேதிதாவின் உடல் அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் திருச்சூருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கு நாளை காலை 9.30 மணியளவில் படியூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று பெற்றோர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இறந்த காதலியை திருமணம் செய்த இளைஞர் - கடைசிவரை திருமணம் செய்ய மாட்டேன் என உறுதிமொழி