நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடைபெறவுள்ளது. பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்ற நிலையில், 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தாமதமானது.
தற்போது தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன. 1931ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளிவிவரத்திற்கு பின் இந்தியாவில், சாதிவாரி புள்ளிவிவரங்கள் எதுவும் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இட ஒதுக்கீடு, சமூக நீதி கொள்கைகளை முறையாக நடைமுறைபடுத்த இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கோரிவருகிறது.
![மோடியுடன் நிதீஷ் குமார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12819266_modi.jpg)
நிதீஷ் - மோடி சந்திப்பின் முக்கியத்துவம்
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்க பிகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார் நேரம் கேட்டிருந்தார். இந்நிலையில், ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திப்பிற்கு பிரதமர் மோடி நேரம் அளித்துள்ளதாக நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பிகார் முதலமைச்சருடன் மாநில எதிர்க்கட்சி பிரதிநிதிகளும் பிரதமர் மோடியை சந்திப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை முக்கிய விவகாரமாக முன்னெடுக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தடுப்பூசி போட்டவர்களுக்கும் கரோனா பாதிப்பு- ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்