பிகார் மாநில சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில், பாஜக - ஐக்கிய ஜனதாதள கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதற்கிடையே, பாட்னாவில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் அடுத்த முதலமைச்சராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக, காலை 10 மணிக்கு நடைபெறவிருந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்நாத் சிங் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், அவர் விமான நிலையத்திற்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததால் இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பாஜகவின் பிகார் தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிஸ், மாநில பொறுப்பாளர் பூபேந்திர யாதவ் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நிதிஷ்குமார் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஐக்கிய ஜனதா தள கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராகவும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பாஜக அமைச்சர் பிரேம் குமார் கூறுகையில், "அனைத்தும் சரியாக சென்று கொண்டிருக்கிறது. கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ராஜ்நாத் சிங் இன்று (நவம்பர் 15) வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, அனுபவத்தைக் கருத்தில் கொண்டு உங்களுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கினால் நீங்கள் ஏற்பீர்களா என கேட்டதற்கு, மகிழ்ச்சியுடன் ஏற்பேன் என்ன பிரேம்குமார் தெரிவித்திருந்தார். 2005ஆம் ஆண்டு முதல் துணை முதலமைச்சராக இருந்துவரும் சுஷில்குமார் மோடி, நிதீஷ் குமாருடன் நட்புடன் இருந்து வருகிறார். எனவே, அவருக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் துணை முதலமைச்சராக நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.