மங்களூரு(கர்நாடகா): கர்நாடகாவின் கடற்கரை மாவட்டங்களில் கம்பாலா போட்டிகள் பிரபலம். இரு எருமைகளை பூட்டிக்கொண்டு அதன் கயிற்றை விடாமல் எருமை மாடுகளுடன் ஓடி பந்தய தூரத்தைக் கடக்க வேண்டும். இந்தாண்டு நடைபெற்ற கம்பாலா போட்டியில் புதிய சாதனை எட்டப்பட்டுள்ளது. புதிய சாதனையை பஜகோலி ஜோகிபெட்டுவில் வசிக்கும் கம்பாலா ஓட்டப்பந்தய வீரர் நிஷாந்த் ஷெட்டி படைத்துள்ளார்.
மங்களூரு மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவில் வேணூர்-பெர்முடா பகுதியில் சூர்ய சந்திர ஜோடுகரே என்ற அமைப்பு சார்பில் கம்பாலா போட்டிகள் நடைபெற்றன. இதில், சீனியர் பிரிவில் கலந்துகொண்ட நிஷாந்த் ஷெட்டி 125 மீட்டர் பந்தய தூரத்தை வெறும் 10.44 விநாடிகளில் கடந்து வெற்றி பெற்றார். இதை 100 மீட்டருக்கு கணக்கிடும் போது, 8.36 விநாடிகள் ஆகும். இதுவரை இந்த சாதனையை யாரும் நிகழ்த்தியதில்லை.
கடந்த ஆண்டு நடைபெற்ற கக்கேபடவு சத்ய தர்ம ஜோடுகெரே கம்பாலாவில், கர்நாடகா உசேன் போல்ட் எனக் கூறப்படும் கம்பாலா ஓட்டப்பந்தய வீரர் ஸ்ரீநிவாஸ் கவுடா 100 மீட்டர் பந்தய தூரத்தை 8.78 விநாடிகளில் கடந்து சாதனைப் படைத்திருந்தார். தற்போது இந்த சாதனையை நிஷாந்த் ஷெட்டி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமர்நாத் யாத்திரை முன்பதிவு தொடக்கம்!