நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. சில மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கே.எம்.சி மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் உயிரிழப்பிற்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறைதான் காரணம் என எழுந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கே.எம்.சி. மருத்துவமனை தலைவர் சுனில் குப்தா பேசுகையில், 'நோயாளிகளின் தேவையைக் கணக்கிடும்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது'என ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆனால், மீரட் மாவட்ட நிர்வாகம், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. தரவுகளின் படி, நேற்று(ஏப்.26) ஒரே நாளில் வெவ்வேறு மருத்துவமனைகளில் 30 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
இதில் 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற 8 பேருக்கு கரோனா இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 13 பேர் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
ஆனந்த், நுதிமா, ஆரியவர்தா மற்றும் அபஸ்னோவா உள்ளிட்ட மருத்துவமனைகளில் மொத்தம் எட்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நுதிமா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சந்தீப் கார்க், ஆக்ஸிஜன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டிய சுகாதாரத்துறை அதற்குப் பதிலாக நோயாளிகளை ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றுகிறது'என்றார்.
இந்த மருத்துவமனைகளில் புதிய நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.