உலக அளவில் கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. தினமும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வந்தாலும் தற்போது இங்கிலாந்தில் பரவி வரும் புதியவகைக் கரோனா வைரசால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தப் புதிய வகை வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இன்று (டிச.23) முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து கர்நாடகா வரும் பயணிகள் விமான நிலையங்களில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியா வரும் விமானங்களுக்கு டிசம்பர் 31ஆம் தேதிவரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதேபோல் மகாராஷ்டிர மாநிலத்திலும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு 11 மணி தொடங்கி காலை 6 மணி வரை மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.