ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மற்றும் நிதியுதவி அளிப்பவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்ததாகப் பலர் மீது தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளும் நடத்தப்படுகின்றன. குறிப்பாக தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா, சோபியான், அனந்த்நாக், ஸ்ரீநகர் மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, மாநில புலனாய்வு அமைப்பு மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைகளின் போது, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், கடந்த மே மாதம் ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திபோரா உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 15 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்வதாக சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 11ஆம் தேதி தெற்கு காஷ்மீரின் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது. பயங்கரவாத தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை இன்று(ஜூலை 13) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறது. சோபியான் மாவட்டத்தில் அலியால்புரா, டார்ச் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் வீரர்களின் உதவியுடன் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் இந்த சோதனை எதற்காக நடத்தப்படுகிறது என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
இதேபோல், புல்வாமா மாவட்டத்திலும் பல இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. இம்மாவட்டத்தில் உகோர்குண்ட், தராச் புல்வாமா உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் என்ஏ சோதனை நடத்தப்படுகிறது. கடந்த ஓராண்டாக போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனைக்கான காரணம், வழக்கு உள்ளிட்ட விபரங்கள் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: யூடியூப் பார்த்து 1 லட்சம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் தயாரித்த இளைஞர்கள் கைது!