சண்டிகர்: நாடு முழுவதும் குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் பயங்கரவாதம் உள்ளிட்டச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தும் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ), குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தும் பணியை மேற்கொள்கிறது. இந்நிலையில் பல்வேறு குற்றச்சம்பங்களில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகள் 28 பேரின் பட்டியலை தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் கோல்டீ பிரார். லாரன்ஸ் ரவுடி கும்பலை சேர்ந்த இவர், பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவர் என என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் அண்மையில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் சிங் அதை உறுதி செய்தார். ஆனாலும் டிஜிபி கவுரவ் யாதவ் இதைப்பற்றி விளக்கம் தரவில்லை.
இதேபோல், காலிஸ்தான் தனி நாடு கோரி போராட்டம் நடத்திய "வாரிஸ் பஞ்சாப் டி" அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங்கும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவர் இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கொலை, மிரட்டி பணம் பறித்தல், ஆயுதங்கள் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு, வெளிநாட்டுக்கு தப்பியவர்கள் தான் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் 9 பேர் கனடாவிலும், 5 பேர் அமெரிக்காவிலும் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. லாரன்ஸ் மற்றும் பாம்பியா ரவுடி கும்பல்களை சேர்ந்த சிலர் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்குத் தப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் பதுங்கியுள்ள அன்மோல், தனது கூட்டாளிகளின் உதவியுடன் இந்தியாவில் குற்றச்செயல்களை அரங்கேற்றுவதாக கூறப்படுகிறது. தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள் தான் இவர்களது குறி. மேலும் பாம்பியா ரவுடி கும்பலை சேர்ந்த லக்கி படியால், அர்மீனியாவில் பதுங்கிருப்பதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் பதுங்கியிருப்பதாக கூறப்படும் 28 தேடப்படும் குற்றவாளிகள் விவரம் வருமாறு:
கோல்டீ பிரார் -கனடா/அமெரிக்கா
அன்மோல் பீஷ்னோய்-அமெரிக்கா
குல்தீப் சிங்-யுஏஇ
ஜதித் சிங்-மலேசியா
தர்மா கஹ்லோன்-அமெரிக்கா
ரோஹித் கோத்ரா-ஐரோப்பா
குர்வீந்தர் சிங்-கனடா
சச்சின் தாப்பன்-அஜர்பைஜான்
சத்வீர் சிங்-கனடா
சன்வர் தில்லான்-கனடா
ராஜேஷ் குமார்-பிரேசில்
குர்பீந்தர் சிங்-கனடா
ஹர்ஜாட் சிங் கில்-அமெரிக்கா
தர்மன்ஜித் சிங்-அமெரிக்கா
அம்ரித்பால்-அமெரிக்கா
சக்துல் ஹி-கனடா
குர்பீந்தர் சிங்-கனடா
சத்வீர் சிங்-கனடா
லக்பீர் சிங் லன்டா-கனடா
அர்ஷ்தீப் சிங்-கனடா
சரஞ்சீத் சிங்-கனடா
ரமன்தீப் சிங் -கனடா
கவுரவ் பாட்டியாலா-அர்மீனியா
சுப்ரீப் சிங் ஹேரி சட்டா-ஜெர்மனி
ரமன்ஜித் சிங்-ஹாங்காங்
மன்ப்ரீத் சிங்-பிலிப்பைன்ஸ்
குர்ஜந்த் சிங்-ஆஸ்திரேலியா
சந்தீப் கிரேவால்-இந்தோனேசியா
இதையும் படிங்க: ஜார்கண்டில் 12ஆவது மனைவியை அடித்துக்கொன்ற கணவன் கைது