கோழிக்கோடு: கேரள மாநிலத்தில் நடந்த இலத்தூர் ரயில் தீ விபத்து வழக்கு குறித்து கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில், டெல்லியைச் சேர்ந்த ஷாருக் சைஃபி என்பவர் தனியாக இந்த குற்றத்தைச் செய்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது. இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர் ஆன்லைனில் பயங்கரவாத செயல்களில் ஈர்க்கப்பட்டு, இந்த குற்றத்தை செய்ததாகத் தெரிகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர், இந்த குற்றத்தை நிகழ்த்தியவுடன் டெல்லி சென்று தனது சாதாரண வாழ்க்கையை தொடங்கலாம் என நினைத்துள்ளார். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
இந்த வழக்கை முதலில் கேரள காவல் துறை விசாரித்தது. பின்னர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தால் குற்றம் சாட்டப்பட்ட பிறகு, என்ஐஏ வழக்கை எடுத்துக் கொண்டது. காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைக் கருத்தில் கொண்டு என்ஐஏ விசாரணையைத் தொடங்கியது. பின்னர் இந்த வழக்கை ஏப்ரல் 18ஆம் தேதி முதல் என்ஐஏ விசாரணையைத் தொடங்கியது.
கேரளாவை குறிவைத்து நடத்தப்பட்டதாக இந்த சம்பவத்தின் பின்னணியில் மேலும் பல சந்தேக நபர்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. கேரளாவை உலுக்கிய இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளூர் உதவி இருந்திருக்கலாம் என்றும் கருதப்பட்டது. இந்த நிலையில், கோழிக்கோடு இலத்தூர் ரயில் எரிப்பு வழக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்ட ஒரு நபர் செய்த கொடூரமான குற்றம் என்று என்ஐஏ கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட ஷாருக் சைஃபி என்பவர் ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, சக பயணி ஒருவர் மீது பெட்ரோல் போன்ற திரவத்தை ஊற்றி தீ வைத்து எரித்தார். இந்த தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் ஒன்பது பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இரவு 9.45 மணியளவில் கோழிக்கோடு நகரைக் கடந்து கொரபுழா ரயில் பாலத்தில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது அரங்கேறியது.
இதையும் படிங்க: 2010 எஸ்ஐ வெற்றிவேல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி வாகன விபத்தில் உயிரிழப்பு!