தக்சின கன்னடா: கர்நாடக மாநிலம், தக்சின கன்னடா மாவட்டத்தின் பா.ஜ.க. யுவ மோர்ச்சா அணித் தலைவராக இருந்தவர், பிரவீன் நெட்டாரு. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி, பெல்லாரே கிராமத்தில் அவர் நடத்தி வந்த கோழிக்கடையின் முன் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கை தேசியப் புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 14 லட்ச ரூபாய் சன்மானம் வழங்குவதாக என்.ஐ.ஏ. அறிவித்தது. இதையடுத்து கிடைக்கப்பட்ட தகவலின் பேரில் பிரவீன் நெட்டாரு கொலை வழக்கில் தொடர்புடையதாக 3 பேரை கடந்த நவம்பர் 5ஆம் தேதி, என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தலைமறைவான இருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் வலைவீசித் தேடி வருகின்றனர். கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள முகமது ஷெரீப், மற்றும் கே.ஏ.மசூத் ஆகியோரை கண்டுபிடிக்க உதவினால் தலா 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.
தலைமறைவாக இருக்கும் இருவரும் தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சோ்ந்தவா்கள் என என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் குறித்து info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, அல்லது 080-29510900/ 8904241100 என்ற தொலைபேசியின் வாயிலாகவும் தகவல் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லது Superintendent of Police, National Investigation Agency (NIA), 8th Floor, Sir.M.Visveswaraiah Kendriya Sadan, Dommalur, Bengaluru 560071 என்ற முகவரிக்கு நேரடியாகவோ, கடிதம் மூலமாகவோ தங்கள் தகவல்களை தெரிவிக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும் குற்றவாளிகள் குறித்து பொது மக்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர்.
இதையும் படிங்க: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்தம் கோலாகலம்... முக்கிய விருந்தினர்கள் பங்கேற்பு..