ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை
12ஆவது முறையாக ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அலுவலர்கள், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
பள்ளிகள் திறப்பு: இன்று வெளியிடப்பட உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு
9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 20) அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னதாகக் கூறியிருந்தார்.
சோனியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். காணொலிக் காட்சி வாயிலாக நடக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, சரத் பவார், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்பத்தூர், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஓய்வு பெறுகிறார் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி என்.கிருபாகரன்...
சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கிருபாகரன் இன்று பணி ஓய்வு பெறுகிறார். கிருபாகரன் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு, நேற்று அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 2009ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.