உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்வுக்குழு கொலிஜியம் என்றழைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் தலைமை நீதிபதி, நான்கு மூத்த நீதிபதிகள் இடம்பெற்றுள்ளனர். தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான கொலிஜியம் ஒன்பது நீதிபதிகளின் பெயர்களைப் பரிந்துரைத்து பட்டியலை அரசுக்கு அனுப்பியிருந்தது.
கொலிஜியம் பரிந்துரையை ஏற்று மூன்று பெண் நீதிபதிகள் உள்பட ஒன்பது பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான பரிந்துரையை அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் நீதிபதிகள் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தார்.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 31), குடியரசுத் தலைவர் மாளிகையில் மூன்று பெண் நீதிபதிகள் உள்பட ஒன்பது புதிய நீதிபதிகளுக்கும் பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவில், நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே ஒரேநாளில் ஒன்பது நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
இந்த நியமனத்தின் மூலம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒரு நீதிபதி பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
புதிதாக பதவி ஏற்ற ஒன்பது நீதிபதிகள்
- நீதிபதி பி.வி. நாகரத்னா - கர்நாடக உயர் நீதிமன்றம்
- நீதிபதி பேலா திரிவேதி - குஜராத் உயர் நீதிமன்றம்
- நீதிபதி ஹிமா கோலி - தெலங்கானா உயர் நீதிமன்றம்
- நீதிபதி பி.எஸ். நரசிம்மா - உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்
- நீதிபதி ஏ. ஓகா - கர்நாடக உயர் நீதிமன்றம்
- நீதிபதி விக்ரம் நாத் - குஜராத் உயர் நீதிமன்றம்
- நீதிபதி ஏ.கே. மகேஸ்வரி - சிக்கிம் உயர் நீதிமன்றம்
- நீதிபதி சி.டி. ரவிக்குமார் - கேரள உயர் நீதிமன்றம்
- நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் - சென்னை உயர் நீதிமன்றம்
முதல் பெண் தலைமை நீதிபதி
புதிதாகப் பதவியேற்ற மூன்று பெண் நீதிபதிகளில் ஒருவரான பி.வி. நாகரத்னா, பணி மூப்பு அடிப்படையில் வரும் 2027ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம், நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாகும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?