டெல்லி: வாகனத்தை வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்வதை எளிதாக்க மத்திய அரசு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
அதன்படி புதிய வாகனங்களை பிஎச் (BH Bharat series) என துவங்கும் பதிவெண்ணில் வாகன உரிமையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் பணி நிமித்தமாக வெவ்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது, அவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னை வாகனங்களுக்கான பதிவை மாற்றுவது (transferring registration) தான்.
மோட்டார் வாகன சட்டப்படி, ஒரு மாநிலத்தில் பதிவு செய்த வாகனத்தை, வேறு மாநிலத்திற்கு கொண்டு செல்லும் பட்சத்தில் ஒரு வருடத்திற்குள் புதிய மாநில அங்கீகாரத்துடன் புதிய வாகன பதிவைப் பெறுவது கட்டாயமாகும்.
புதிய வாகனப் பதிவு தேவையில்லை
ஆனால், தற்போது பிஎச் சீரிஸ் வாகனங்கள் வைத்திருந்தால் நாட்டிலுள்ள எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் வாகனப் பதிவை மாற்றாமல் சாலைகளில் பயணிக்க முடியும்
இந்தத் திட்டம் முன்னுரிமை அடிப்படையில் சிலருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, மத்திய, மாநில அரசு அலுவலர்கள், ஊழியர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியும்.
அதே போல, தனியார் ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் கிளைகள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் இருக்கும் பட்சத்தில் பிஎச் வாகன பதிவை பெற முடியும்.
இதையும் படிங்க: பெருந்தொற்றுக்கு பின் சென்னையில் ஸ்டார்ட்அப் சூழல் எப்படி இருக்கிறது?