கண்ணூர் : கேரள மாநிலம் கண்ணுரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயிலில் மழை நீர் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு நாள் பயணமாக கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி பிரதமர் மோடி கேரளா சென்றார். கேரள மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயிலை திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையடுத்து திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. தனது முதல் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய வந்தே பாரத் ரயில் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென கண்ணூர் ரயில் நிலையத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது.
கனமழையால் வந்தே பாரத் விரைவு ரயிலில் மழை நீர் கொட்டியது. ஒட்டுமொத்த ரயிலின் ஒரு பெட்டியில் மட்டும் மழை நீர் கொட்டியதாக கூறப்படுகிறது. ரயிலினுள் மழை நீர் கொட்டியது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து என்ன காரணத்திற்கான அந்த பெட்டியில் மழை நீர் கொட்டியது என ரயில்வே பணியாளர்கள் சோதனை மேற்கொண்டனர்.
குளிர்சாதன பெட்டி இருக்கும் இடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக மழை நீர் ரயிலினுள் ஒழுகியதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து பழுது சரி செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். காசர்கோடு ரயில் நிலையத்தில் போதிய வசதி குறைவு காரணத்தால் கண்ணூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பழுது சரி செய்யப்பட்ட நிலையில் ரயில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியதாகவும், ரயிலினுள் மழை நீர் கொட்டுவது தவிர்க்கப்பட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக பிரதமர் மோடி துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில் தனது முதல் சேவைக்காக புறப்பட தயாராக இருந்த நிலையில் கேரள எம்பியின் ஆதரவாளர்கள் ரயிலில் அவரது போஸ்டர்களை ஒட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.
ஷோரனூர் சந்திப்பு நிலையத்திற்கு வந்த ரயிலின் முன் திரண்ட பாலக்காடு காங்கிரஸ் எம்.பி. ஸ்ரீகாந்தனின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். மேலும் புறப்பட தயாராக இருந்த வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகளில் எம்.பி ஸ்ரீகாந்தனின் புகைப்படம் பொறித்த போஸ்டர்களை ஒட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவிய நிலையில் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : NCERT-ஆல் நீக்கப்பட்ட குஜராத் கலவரம், முகலாயர்களின் வரலாறு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் - கேரள அமைச்சர்