டெல்லி : பிரிட்டன் நாட்டின் தென் பகுதிகளில் பரவி வரும் வீரியம் மிக்க புதிய வகை கரோனா வைரஸ் காரணமாக, உலக நாடுகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டிலிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் இந்திய அரசு வரும் 31ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது.
இதைத் தொடர்ந்து லண்டனிலிருந்து சென்னை வந்த சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இது புது வகை கரோனா வைரஸாக இருக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. இந்நிலையில், இந்தியாவில் தற்போது வரை மேற்கொள்ளபட்ட கரோனா பரிசோதனையில் இந்தப் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனருமான சமீரன் பாண்டா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய அவர், "நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் இந்தப் புதிய வகை கரோனா இந்தியாவில் பரவ வாய்ப்பு இல்லை என்று அர்த்தம் கிடையாது.
இந்தப் புதிய வகை தொற்றுப் பரவலின் தன்மை எவ்வாறு இருக்கும் என்பது தெரியவில்லை. இதன் மரபணு மாற்றம் தொடர்பாக தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கரோனா பரவலின் தன்மை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. எனவே முறையான நடவடிக்கைகளை எடுத்து, பரவலைத் தடுக்க வேண்டும்.
புதிய வகை கரோனா குறித்து அச்சம் கொள்வதைத் தவிர்த்து, எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நாடு முழுவதும் கரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் விரைவாக குணமடைந்து வருகின்றனர். அதேபோல் கரோனா இறப்பு விகிதமும் குறைவாகவே உள்ளது. கரோனா தடுப்பூசிகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகவே தயாரிக்கப்படுகின்றன. எனவே புதிய வகை கரோனாவால், இதுவரை பரிசோதிக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பூசிகளின் முயற்சி வீண் தோல்வி எனக் கூற முடியாது.
இந்தியாவில் தற்போது வரை புதிய வகை கரோனா வைரஸ் உறுதி செய்யப்படாவிட்டாலும், நாம் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். இல்லையெனில் இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பரவும் புதிய வகை கரோனா வைரஸ்!