டெல்லி: பிரிட்டனில் பரவ தொடங்கிய உருமாறிய கரோனா பரவல் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே 20 பேருக்கு இந்த புதிய வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக ஐந்து பேருக்கு உறுதியாகியுள்ளது. எனவே இதன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், "புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய சக பயணிகளை கண்டறியும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த உருமாறிய கரோனா பரவல் சூழலை முழு கவனத்துடன் கையாண்டு வருகிறோம். அதேபோல விழிப்புடன் செயல்பட வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா பரவல், டென்மார்க், ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், ஸ்பெயின், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதிவரை பிரிட்டனிலிருந்து 33 ஆயிரம் பேர் இந்தியா திரும்பியுள்ள நிலையில், அவர்களை கண்டறிந்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையில், மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
முன்னதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 23ஆம் தேதி முதல் ஜனவரி ஏழாம் தேதிவரை பிரிட்டன் உடனான விமான சேவைக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதையும் படிங்க: சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் மூலம் வசூல்:பிப்ரவரி 15 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு