காத்மாண்டு: நேபாளத்தில் டோட்டி மாவட்டத்தில் இரண்டு நிலநடுக்கங்களில் குறைந்தது ஆறு பேர் இறந்திருக்கலாம் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக 5 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளால் வீடுகள் சேதமடைந்துள்ளன, என மாவட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இறந்தவர்களில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள நேபாள ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் குறித்து தேசிய நில அதிர்வு மையம் (NCS), “அதிகாலையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ரிக்டர் என பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலை 2:12 மணியளவில் ஏற்பட்டது. முன்னதாக நவம்பர் 8-ம் தேதி அதிகாலை காத்மாண்டுவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது” என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லி, நேபாளத்தில் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி!