இந்தூர்: மத்தியபிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தின் பெசோடா கிராமத்தைச் சேர்ந்த லிபக்ஷி படிதார் என்ற மாணவி, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவராக வேண்டும் என ஆசைப்பட்ட அவர், நீட் தேர்வுக்கு தீவிரமாக தயாராகி வந்தார்.
கடந்த ஜூலை 17ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் பங்கேற்ற மாணவி, 200 கேள்விகளில் 161 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சியடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், லிபக்ஷி பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றிருந்தார்.
திகைத்துப் போன மாணவி விடைத்தாள் (ஓஎம்ஆர்) நகலை கோரி விண்ணப்பித்தார். அதை வாங்கி பார்த்தபோது, ஓஎம்ஆர் தாள் முழுவதும் காலியாக இருந்தது. இதனால் தனது விடைத்தாள் மாற்றப்பட்டிருப்பதாக மாணவி குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மாணவி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், மாணவியின் விடைத்தாளின் அசலை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தியது.
விடைத்தாள் அசலை தாக்கல் செய்ய ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: ஹிஜாப் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு - உச்ச நீதிமன்றம் உத்தரவு!