இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில், கேரள மாநிலத்திலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
அத்தியாவசியப் பணிக்குச் செல்வோர் மட்டும், 'இ-பாஸ் அப்ளை' செய்து பயணித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கில் 'இ-பாஸ் அப்ளை' செய்யப்படுவதாக கேரள காவல் துறை தெரிவித்தது. ஆனால், அதில் வந்திருந்த ஒரு 'இ-பாஸ் ' கோரிக்கை கேரள காவல் துறையினரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
அதில், கேரள வாசி ஒருவர், 'Need to go for sex' எனக் குறிப்பிட்டிருந்தார். உலகமே கரோனா பிடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், உடலுறவு செய்திட வேண்டும் என, 'இ-பாஸ் அப்ளை' செய்வதா என கோபமடைந்த துணை காவல் ஆணையர், அந்நபரை உடனடியாக அழைத்து வருமாறு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, அந்நபரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் தான் உண்மை வெளிவந்தது. அவர், "six o'clock' என குறிப்பிடுவதற்குப் பதிலாக "sex" என தவறுதலாக குறிப்பிட்டது தெரியவந்தது. இதற்காக அவர் காவல் துறையிடம் மன்னிப்பும் கோரினார்.
பின்னர், அந்நபர் தவறுதலாகத் தான் பதிவிட்டார் என்பது உறுதியானதையடுத்து, அவரை விடுவித்தனர். இதே போல, கடந்த வாரம் முகப்பரு சிகிச்சைக்காக இ-பாஸ் அப்ளை செய்திருந்த நிகழ்வும், சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறியது.