ஜார்க்கண்ட் மாநிலம், தும்காவில் காதலிக்க மறுத்ததற்காக சிறுமி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூங்கிக் கொண்டிருந்த சிறுமி எரிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சிறுமி கொலை சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, "தும்காவில் காதலிக்க மறுத்ததற்காக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி, இறப்பதற்கு முன்பு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், தன்னை தாக்கிய குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சிறுமியின் கொடூர மரணம், ஒவ்வொரு இந்தியரையும் தலை குனிய வைத்துள்ளது. இன்று, நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தக் கொடுமையைச் செய்த குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை விரைவில் கிடைத்தால்தான் சிறுமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நீதி கிடைக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஜார்க்கண்ட் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் விரைவான சட்ட நடைமுறைகளை முடித்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டியது அவசியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மரண தண்டனை கொடுங்க... தும்கா சிறுமியின் இறுதி வாக்குமூலம்...