டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்த இவர், சந்தாலி எனும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்.
2015ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்தார். இரண்டு முறை ஒடிஷா சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். முர்மு தேர்தலில் வெற்றி பெற்றால், நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் ஆவார். குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முர்முவுக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்தனர். முர்மு நாளை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், திரௌபதி முர்மு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்முவை தேர்வு செய்ததற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்திருப்பதாகவும், நாட்டின் அடிப்படை பிரச்னைகள் பற்றிய திரௌபதி முர்முவின் புரிதல் மற்றும் நாட்டின் வளர்ச்சி குறித்த அவரது பார்வை சிறப்பாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா நடைமுறைகளை மீறியதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மீது வழக்குப்பதிவு!