மகாராஷ்டிர உள் துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான அனில் தேஷ்முக், மாதந்தோறும் நூறு கோடி ரூபாய் வசூல்செய்து தன்னிடம் கொடுக்கும்படி வற்புறுத்தியதாகவும், தான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகவும் மும்பை காவல் ஆணையராக இருந்த பரம்வீர் சிங் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தினார்.
இதுபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், அனில் தேஷ்முக் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துவருகின்றன. பரம்வீர் சிங் சொன்ன குறிப்பிட்ட காலத்தில் அனில் தேஷ்முக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், "முன்னாள் காவல் ஆணையரின் கடிதத்தை நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்கு ஒன்று தெரியவரும். பிப்ரவரி மாதத்தின் மத்தியில் அலுவலர்களை அழைத்து அவர் சில அறிவுரைகளை வழங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், பிப்ரவரி 6 முதல் 16 வரை, கரோனா காரணமாக தேஷ்முக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உண்மையான நோக்கத்திலிருந்து திசை திருப்ப சதிச் செயல் திட்டமிடப்படுகிறது" என்றார்.
பிப்ரவரி 15ஆம் தேதி, செய்தியாளர் சந்திப்பில் தேஷ்முக் கலந்துகொண்டதாக பாஜகவின் அமித் மால்வியா குற்றச்சாட்டு சுமத்திய நிலையில், சரத் பவார் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.