புனே : எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தாவல் தனக்கு கவலை அளிக்கவில்லை என்றும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மக்கள் யதார்த்தத்தை பார்ப்பார்கள் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்து உள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்த அஜித் பவார், 30 தேசியவாத காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் இணைந்து பாஜக - சிவசேனா கூட்டணிக்கு அதரவு தெரிவித்தார். இதையடுத்து அஜித் பவாருக்கு மராட்டிய துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 9 எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவல் குறித்து பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவல் தனக்கு கவலை அளிக்கவில்லை என்றும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மக்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்வார்கள் என்றும் கூறினார்.
மேலும், பேசிய அவர், "எனது வீடு பிரிந்தது என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன், இந்த பிரச்சினை எனது வீடு தொடர்பானது அல்ல, இது மக்களின் பிரச்சினை. வெளியேறியவர்களின் எதிர்காலம் குறித்து நான் கவலைப்படுகிறேன். இதற்கான பெருமையை பிரதமர் மோடிக்கு வழங்க விரும்புகிறேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார், அந்த அறிக்கைக்குப் பிறகு, சிலரது மனநிலை அமைதியின்மை நிலைக்கு தள்ளப்பட்டது. மேலும் சிலர் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை எதிர்கொண்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி தேசியவாத காங்கிரஸ் கட்சி பற்றி கூறினார்.
அதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி முடிவு நிலையை எட்டிய கட்சி என்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து குறிப்பிட்டு இருந்தார். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும், அவர்கள் இணைந்ததன் மூலம் கட்சி உறுப்பினர்கள் மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்து விடுவிக்கப்பட்டது தெளிவாவதாக" சரத் பவார் கூறினார்.
மகாராஷ்டிரா மக்களை தான் நம்புவதாகவும், இரண்டு அல்லது மூன்று நாட்களில் உண்மை தெரியவரும் என்றும் அவர் கூறினார். எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவல் ஒன்றும் தனக்கு புதிதல்ல என்றும் 1980 ஆம் ஆண்டு தான் வழிநடத்திய கட்சியில் 58 எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில், அனைவரும் வெளியேறி வெறும் 6 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்ததாக கூறினார்.
அதன் பின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையை பலப்படுத்தியதாகவும் விட்டுச் சென்ற எம்.எல்.ஏக்கள் அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வியை தழுவியதாகவும் அஜித் பவார் கூறினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பலர் தன்னை அழைத்து பேசியதாக சரத் பவார் கூறினார்.
இதையும் படிங்க : "தங்கள் தரப்பே உண்மையான தேசியவாத காங்கிரஸ்.." மராட்டியத்தில் மீண்டும் ஒலிக்கும் வாசகம்!